மாரியம்மன் கோவில் பூகுண்டம் திருவிழா
ஊட்டி:ஊட்டி அருகே ஆனிக்கல் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பூகுண்டம் திருவிழா வரும் மார்ச், 1ம் தேதி துவங்குகிறது.முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆனைகட்டி வனப்பகுதியில், ஆனிக்கல் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் குண்டம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா வரும், 1ம் தேதி துவங்குகிறது. 2ம் தேதி சிறப்பு பூஜை, காணிக்கை செலுத்துதல், அம்மன் அலங்கார ஊர்வலம், அன்னதானம் ஆகியவை நடக்கிறது. திருவிழா நாளான, 3ம் தேதி அதிகாலை, 2:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்குகிறது. காலை, 7:00 மணிக்கு விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பூகுண்டம் இறங்குகின்றனர். விழாவையொட்டி சுற்றுப்புற பகுதிகளில் மது வகைகள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.