அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் பஜனை
அன்னுார்: அன்னுார் வட்டாரத்தில், சிவராத்திரியை முன்னிட்டு, விடிய விடிய பஜனையும், சிறப்பு வழிபாடும், நடந்தது.மன்னீஸ்வரர் கோவிலில், 21 ம் தேதி மாலையில், சிவராத்திரி விழா துவங்கியது. ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளி மாணவியரின் பரதநாட்டியம் நடந்தது. இதையடுத்து, இரவு 7:00 மணிக்கும், 11:00 மணிக்கும், நள்ளிரவு ஒரு மணிக்கும், 22 ஆம் தேதி அதிகாலை 3:00 மணிக்கும், அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9:30 மணிக்கு, அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை துவங்கி, மறுநாள் காலை 5:00 மணி வரை நடனத்துடன், விடிய விடிய நடந்தது. இதில், அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பக்தர்கள் சிலரும் பங்கேற்றனர்.விழாவில் 5,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் மன்னீஸ்வரர் கோவில் உள் பிரகாரத்தை, 108 முறை சுற்றி வந்து, மூலவரை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இரவு 7:00 மணிக்கு முதல்கால பூஜையும், இரவு 10:00 மணி, இரவு 1:00 மணி, மறுநாள் அதிகாலை 3:00 மணி என நான்கு காலம், அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது.பல ஆயிரம் பக்தர்கள், இரவு முழுவதும் கோவில் வளாகத்தில், காலகாலேஸ்வரரை வழிபட்டு, சிவபுராணம் வாசித்து, வழிபாடு செய்தனர்.