திருவொற்றியூர் தியாகராஜர் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
திருவொற்றியூர் : திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில், மாசி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, திருத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில், மாசி பிரம்மோற்சவ திருவிழா, பிப்.,29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா, வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டு, மாசி பிரம்மோற்சவம், பிப்.,29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாசி பிரம்மோற்சவ நாட்களில், உற்சவர் சந்திரசேகரர், சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, யானை, புஷ்ப பல்லாக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான, சந்திர சேகரர் திருத்தேர் உற்சவம் இன்று( மார்., 6) கைலாய வாத்தியங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். வரும் 8ம் தேதி காலை, திருக்கல்யாணம், மதியம், 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு, மகிழடி சேவை போன்றவை நடைபெறும். வரும், 10ம் தேதி இரவு, தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம், 18 திருநடனத்துடன் விழா நிறைவுறும்.பிரசித்தி பெற்ற, தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவில் சென்னை மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.