உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தா... கோஷம் முழக்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

கோவிந்தா... கோஷம் முழக்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது. 

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக உள்ளது. ஆண்டுதோறும், ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு விழா வருடம் தோறும் 21 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். முதல் நாள் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அதற்கு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதற்கு அடுத்து பகல் பத்து உற்சவம் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,

ரத்தின அங்கி:முன்னதாக அதிகாலை, 3:45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்களை அணிந்து புறப்பட்டார். ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து, நாழிக்கேட்டான் வாசல் வழியாக, குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி, துறைப் பிரகாரம் வழியாக அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் பகுதியை அடைந்தார். பட்டர்களின் வேதபாராயணங்களை கேட்டருளிய நம்பெருமாள், அதிகாலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், கடந்து சென்றார். நம்பெருமாளின் வருகைக்காக காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என, கோஷம் எழுப்பியபடி சொர்க்கவாசலை கடந்து சென்றனர்.சொர்க்க வாசலில் இருந்து வெளியேறிய நம்பெருமாள், ஆயிரங்கால் மண்டபம் முன் அமைத்திருந்த திருக்கொட்டகைக்கு, அதிகாலை, 5:15 மணிக்கு வந்து சேர்ந்தார்.தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாளை கோவிந்தா கோஷம் முழக்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !