உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

புவனகிரி: தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு புவனகிரியில் திருக்கல்யாண உற்சவமும் அதன் பின் வீதியுலா காட்சியும் வெகு விமர்சியாக நடந்தது. வைணவத் திருத்தலங்களில் ஒன்றான (108 திவ்ய தேசங்கள்) சிதம்பரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தில்லை கோவிந்தராஜ கோயில். குலசேகர ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்து எம்பெருமான் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக ஆண்டுதோறும், மாசி மாதம் பவுர்ணமி தினத்தில் கிள்ளை முழுக்குத்துறை தீர்த்தவாரி உற்சவத்திற்கு எழுந்தருளுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கு மாசிமகத்தீர்த்தவாரி முடிந்த நிலையில் அன்று மாலை புறப்பட்டு கீழ் புவனகிரி சின்னப்ப முதலியார் தெருவில் அமைந்துள்ள 110 ஆண்டுகள் பழமையான நன்னைய ராமானுஜ கூட்டத்திற்கு எழுந்தருளள் நிகழ்ச்சியில், சுவாமிக்கு பூரண மரியாதையோடு வரவேற்பளித்தனர். நேற்று முன் தினம் காலை வேதபாராயணங்கள், ஆழ்வார் பாசுரங்கள் முழங்க அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை ஆலய தரிசனம் அறக்கட்டளை சார்பில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார பந்தலில் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளினார். திருக்கண்ணபுரம் பட்டாச்சாரியார் திருக்கல்யாண உற்சவத்தை நடத்திவைத்தார். சித்திர கூடப்பொறுப்பாளர் ரங்காச்சாரி சுவாமி தலைமையில், வேதபண்டிதர்கள் மந்திரங்கள் முழங்கினர்.  சுற்றுப்பகுதியினர் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. ஏற்பாடுகளை நன்னைய ராமானுஜ கூட நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !