உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிறப்பு: காளியம்மன் கோவிலில் இன்று தீ மிதி விழா

3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிறப்பு: காளியம்மன் கோவிலில் இன்று தீ மிதி விழா

சேலம்: காளியம்மன் கோவில் திருவிழாவில், மூன்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் தீ மிதி விழா, இன்று நடக்கிறது.
சேலம், அம்மாபேட்டை, காளியம்மன் கோவிலில், மாசி திருவிழா, கடந்த, 3ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று, மூலவர் அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. மாலை, மாவிளக்கு, பூங்கரக ஊர்வலம் நடந்தது. இங்கு, ஆண்டுதோறும் மாசி திருவிழா நடந்தாலும், மூன்றாண்டுக்கு ஒரு முறையே, தீ மிதி விழா நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டு தீ மிதி விழா, இன்று மதியம், 2:00 மணிக்கு நடக்கிறது. நாளை, அம்மனுக்கு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம், திருவீதி உலா, நாளை மறுநாள் சத்தாபரணம் நடக்கவுள்ளது. வரும், 15ல் மஞ்சள் நீராட்டு, 16ல் ஊஞ்சல் உற்சவம், 17ல் சந்தன காப்பு அலங்காரத்துடன் திருவிழா நிறைவடையும்.
ஆடியபடி...: பனமரத்துப்பட்டி, மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று, பெண்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு, வழிபட்டனர். மாலை, கோவில் முன், அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில், ஏராளமான பக்தர்கள் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். காந்திநகர், ஈச்சமரம் பகுதியிலிருந்து, ஏராளமானோர், பல்வேறு வகை அலகு குத்தி, ஆட்டம் ஆடியபடி, கோவிலுக்கு வந்து, அம்மனை வழிபட்டனர். அதேபோல், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.
ஊர்வலமாக...: சங்ககிரி, வி.என்.பாளையம், சக்தி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் விமான அலகு குத்தி, பூங்கரகம் எடுத்து, அக்னி சட்டி ஏந்தி, பெருமாள் கோவில் வீதி வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின், அம்மனுக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !