ராமர் கோவில் பணி அயோத்தியில் துவக்கம்
 அயோத்தி:அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி, நேற்று சிறப்பு பிரார்த்தனையுடன் துவங்கியது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகிஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு, நவம்பர், 9ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதில், சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட, அயோத்தி அருகே, 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை, மத்திய அரசு அமைக்க வேண்டும் என, கூறப்பட்டது.இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்காக, 15 உறுப்பினர்கள் அடங்கிய, ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை, கடந்த மாதம், மத்திய அரசு அமைத்தது.அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி, மார்ச், 23ல் துவக்கப்படும். முதல் கட்டமாக, இப்போதுள்ள, தற்காலிக ராமர் கோவில் சிலைகள், வேறு இடத்துக்கு மாற்றப்படும் என, அறக்கட்டளை தெரிவித்து.
இந்நிலையில், அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி, நேற்று காலை சிறப்பு பிரார்த்தனையுடன் துவங்கியது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நிகழ்ச்சியில் பங்கேற்க சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதில், அறக்கட்டளையின் செயலர், சபத் ராய், உறுப்பினர்கள், பிம்லேந்திர மிஸ்ரா, டாக்டர் அனில் மிஸ்ரா உட்பட சிலர் பங்கேற்றனர். பின்னர், அறக்கட்டளை செயலர், சபத் ராய் கூறியதாவது:கொரோனா வைரஸ் பீதியால், துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, துறவிகள் உட்பட யாரையும் அழைக்கவில்லை. தற்காலிக ராமர் கோவிலில் உள்ள சிலைகள், இரண்டு நாட்களில் வேறு இடத்துக்கு மாற்றப்படும். கோவில் கட்டி முடிக்கப்படும் வரை, அங்கேயே சிலைகளுக்கு பூஜை நடத்தப்படும். கொரோனா வைரஸ் பீதி குறைந்த பின், கோவில் கட்டுமான பணிகள் துவக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். கொரோனா பரவல் காரணமாக, அயோத்தியில் உள்ள அனைத்து கோவில்களும், மூடப்பட்டு உள்ளன.