வேப்பிலையை வைத்து காப்பு கட்டி இயங்கிய கடைகள்
திருப்பூர் : திருப்பூர் நகரப்பகுதியில், வேப்பிலை காப்பு கட்டியும், மஞ்சள் நீர் தெளித்தும், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் விற்கப்பட்டன .
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஐந்து நபர்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற மக்களும், பேச்சுலர்களும், அம்மா உணவகங்களில் உணவு சாப்பிட்டனர். மருந்துகடைகள், சிறிய மளிகை கடைகள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டன. ரோட்டோரமாக, சிறிய காய்கறி கடைகளும், இறைச்சிக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தது. காய்கறி கடைக்காரர்கள், வேப்பிலையை வைத்து காப்பு கட்டியிருந்தனர்.
கடையை சுற்றிலும், மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டிருந்தது. மஞ்சள் நீர் தெளித்தால்,வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்பதால், மஞ்சள் நீர் தெளித்து, காய்கறி விற்பனையை துவக்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.பொதுமக்கள் நடமாட் டம் இல்லாவிட்டாலும், அரசு அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய இடங்களில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முதல் நாள் என்பதால், போலீசார் அதிக கெடுபிடி காட்டவில்லை; இன்று முதல், ஊரடங்கு உத்தரவு பலமாக பின்பற்றப்படும்.