கொரோனாவால் கோவில்கள் மூடல்; யுகாதி பண்டிகையில் மக்கள் ஏமாற்றம்
தர்மபுரி: கொரோனா வைரஸ் எதிரொலியால், தர்மபுரியில் கோவில்கள் மூடப்பட்டதால், தெலுங்கு வருட புத்தாண்டான யுகாதியை கொண்டாட முடியாமல், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். தமிழகத்தில், 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால், கடந்த ஒருவாரமாக கோவில்கள் அடைக்கப்பட்டு, பக்தர்கள் யாரும் செல்ல முடியாமல், கோவில் பூசாரிகள் மட்டுமே அபிஷேக மற்றும் ஆராதனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், வருட பிறப்பை போலவே, யுகாதி பண்டிகையை தெலுங்கு வருட பிறப்பாக, தெலுங்கு மற்றும் கண்டம் பேசும் மக்கள், இந்த புத்தாண்டை யுகாதி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். யுகாதி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களுக்கு, தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து, இவர்கள் வழிபடுவது வழக்கம். தற்போது கடை பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவால், இவர்கள் கோவில்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் சிலர், தங்களது வீடுகளிலேயே சுவாமிக்கு படையல் வைத்து, தெலுங்கு வருட புத்தாண்டை கொண்டாடினர். வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்பதால், அருகில் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு கூட செல்ல முடியாமல், இவர்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கி, பண்டிகையை கொண்டாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.