கொரோனாவில் இருந்து விடுபட திருமலையில் தன்வந்திரி யாகம்
திருப்பதி :திருமலையில், நேற்று முதல், ஸ்ரீசீனிவாச சாந்தி உத்ஸவ சஹீத தன்வந்திரி மகாயாகம் துவங்கப்பட்டது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்லாயிரகணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், உலகத்தை காக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரமான தன்வந்திரிக்கு, மகாயாகம் நடத்த, தேவஸ்தானம் முடிவு செய்தது. உலக நன்மைக்காக அமிர்த கலசத்தை கையில் ஏந்திய தன்வந்திரியை, ஆயுர்வேத மருத்துவர் என, புராணங்கள் கூறுகின்றன. அவரை வணங்கினால் கொடிய நோய்களும் குணமாகும் என, ஆச்சாரியர்கள் கூறுகின்றனர்.
எனவே, கொரோனா பாதிப்பிலிருந்து நாடு விடுபட, திருமலையில் உள்ள தர்மகிரி வேதபாடசாலையில், தன்வந்திரி யாகம், தேவஸ்தானம் சார்பில் நேற்று காலை முதல் துவங்கியது. இதற்காக வரவழைக்கப்பட்ட வேத விற்பன்னர்கள், யாகத்தை சிரத்தையாக நடத்தி வருகின்றனர். வரும், 28ம் தேதி காலை மகாபூர்ணாஹூதியுடன் தன்வந்திரியாகம் நிறைவு பெற உள்ளது. இதே போல, காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோவிலில், உலக நன்மைக்காக, நேற்று முதல், 30ம் தேதி வரை, மகா மிருத்யுஞ்ஜெய ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நேற்று முன் தினம், கோவில் வளாகத்தில் கலசஸ்தாபனம், கணபதி பூஜையுடன் மிருத்யுஞ்ஜெய ஹோமம் துவங்கியது. இந்த ஹோமம் தொடர்ந்து, ஐந்து நாட்கள் நடக்க உள்ளது. வரும் திங்கட்கிழமை மகாபூர்ணாஹூதியுடன் ஹோமம் நிறைவு பெற உள்ளது.