கொரோனா தாக்கத்தில் இருந்து காக்க தன்வந்திரி யாகம்
சேலம்: சேலம், அணைமேடு சவுராஷ்டிரா நந்தவனத்தில் உள்ள, ரேணுகா அம்மன் கோவில் மண்டபத்தில் நேற்று காலை, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து உலகம் விடுபட வேண்டி, 108 மூலிகைகளை கொண்டு கணபதி, சுதர்சன, நவக்கிரக மற்றும் தன்வந்திரி யாகங்கள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, 1,008 முறை தன்வந்திரி மகா மந்திர பாராயணம், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் செய்யப்பட்டது. காலை, 8:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை நடந்த யாகத்தில் புரோகிதர்களை தவிர, மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கலந்து கொண்டவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். பூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவடைந்து புனிதநீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதே போல், தமிழக அறநிலையத்துறை உத்தரவுப்படி அம்மாபேட்டை காளியம்மன் கோவிலில், வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காக்க, மூலவர் அம்மனுக்கு சந்தனகாப்பு சார்த்தி, வேப்பிலைகள் மற்றும் எலுமிச்சம் பழ மாலைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.