ஆபத்தை போக்கும் ஆலங்குடி பதிகம்
தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் பதிகத்தை தினமும் பாடுங்கள்.
சீரார் கழலே தொழுவீர் இதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ்சு அமுதுண்ட கருத்தே.
தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலார் இரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.
அன்பா லடிகை தொழுவீர் அறியீரே
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.
நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
உச்சித் தலையிற் பலிகொண் டுழலுாணே.
சுற்றார்ந் தடியே தொழுவீர் இதுசொல்லீர்
நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
புற்றாடு அரவோடென்பு பூண்ட பொருளே.
.................
தோடார் மலர்துாய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோடு உடனாகி
ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காடார் கடுவே டுவனான கருத்தே.
இப்பதிகத்தில் 7-ம் பாடல் சிதைந்து போயிற்று.
ஒருக்கும் மனத்தன்பர் உள்ளீர் இதுசொல்லீர்
பருக்கை மதவேழ முரித்து உமையோடும்
இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அரக்கன் உரந்தீர்த்தருள் ஆக்கிய வாறே.
துயரா யினநீங்கித் தொழும் தொண்டர் சொல்லீர்
கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரியாகிய மொய்ம்பே.
துணைநன் மலர்துாய்த் தொழும் தொண்டர்கள் சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோடு உடனாகி
இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண் சாக்கியமாக் கியவாறே.
எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
செந்தண் தமிழ்செப்பிய பத்திவை வல்லார்
பந்தம் மறுத்தோங்குவர் பான்மையினாலே.