கோவில் அர்ச்சகர்கள் பாதிப்பு; அரசு உதவித்தொகை எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், வருமானம் இன்றி தவிக்கும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் வால்பாறை சுற்றுப்பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில், மூன்று கால பூஜைகள் மற்றும் ஒரு கால பூஜைகள் நடக்கும் கோவில்களும் உள்ளன.கோவில்களில் தட்டு காணிக்கை மற்றும் கோவில் சம்பளம் ஆகியவை கொண்டு, அர்ச்சகர்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர். மேலும், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கும்; திதி உள்ளிட்டவைக்கும் சென்று சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.இந்நிலையில், அரசு ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோவில்கள் மூடப்பட்டதால், அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் வருமானமின்றி தவிக்கின்றனர். ஒரு கால பூஜை செய்யும் கோவில்களில் பணியாற்றுபவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு கிராம கோவில் பூஜாரிகள் பேரவை நகர அமைப்பாளர் கோவிந்த்ஜி, தாசில்தாரிடம் கொடுத்த மனுவில், கோவில்களில் இருந்து வரும் தட்டு காணிக்கை மற்றும் சொற்ப மாத சம்பளத்தை நம்பி, கோவில் பூஜாரிகள் வாழ்கின்றனர்.ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால், வருமானமின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு, அரசு உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, குறிப்பிட்டுள்ளார்.