உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணகியை தரிசித்த 17 ஆயிரம் பக்தர்கள்: இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகம்!

கண்ணகியை தரிசித்த 17 ஆயிரம் பக்தர்கள்: இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகம்!

தேனி: கடந்த சித்ரா பவுர்ணமியில், மங்கலதேவி கண்ணகியை, 17 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள, மங்கலதேவி கண்ணகியை, ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி தினத்தில் மட்டுமே, பக்தர்கள் தரிசிக்க முடியும். கண்ணகி கோவில், தமிழக வனப்பகுதியில் இருந்தாலும், கேரள வனப்பகுதி வழியாக மட்டுமே, கோவிலுக்குச் செல்ல முடியும். குமுளியில் இருந்து, கண்ணகி கோவிலுக்கு, 13 கி.மீ., தூரம் உள்ள வனப்பாதை, மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதற்கு அதிக முயற்சி தேவை. இவ்வாண்டு, கேரள வனத்துறை இதற்கு ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. பெரியார் புலிகள் சரணாலய துணை இயக்குனர் சஞ்சயன் குழுவினர், கேரளாவிற்குள், வனப்பாதைகளைச் சீரமைத்துக் கொடுத்து, 15 இடங்களில், ராட்சத தண்ணீர் தொட்டிகள் அமைத்துக் கொடுத்தனர். குமுளியில் இருந்து, 750 கேரள ஜீப்புகளும்; தமிழகத்தில் இருந்து, 60 ஜீப்புகளும் கோவிலுக்கு இயக்கப் பட்டன. இதனால், பகல் 2 மணிக்குள், 17 ஆயிரம் பக்தர்கள், கோவிலுக்குச் சென்று விட்டனர். இதில், 6 ஆயிரம் பேர், பளியன்குடி மலைப்பாதை வழியாக நடந்து சென்று, கோவிலை அடைந்தனர். கடந்த ஆண்டில், ஏற்பாடுகள் முறையாக இல்லாததால், 11 ஆயிரம் பக்தர்களே, கண்ணகி கோயிலுக்குச் சென்றனர். இம்முறை, போக்குவரத்து வசதி, கோவிலில் தரிசன வசதி செய்து தரப்பட்டிருந்தன. கேரள வனத்துறையின் ஒத்துழைப்பே இதற்கு காரணம் என, தமிழக அதிகாரிகள் மனம் திறந்து பாராட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !