உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலை முனீஸ்வரன் கோவில் முன் புதையலுக்காக பள்ளம் தோண்டிய கும்பல்

மலை முனீஸ்வரன் கோவில் முன் புதையலுக்காக பள்ளம் தோண்டிய கும்பல்

ஓசூர்: சூளகிரி அருகே, மலை முனீஸ்வரன் கோவில் முன், விஷேச பூஜை செய்த மர்ம கும்பல், புதையல் எடுக்க பள்ளம் தோண்டிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கீழ்தெருவை சேர்ந்தவர் பசப்பா, 67; விவசாயியான இவருக்கு, காமநாயக்கன்பேட்டையில் விவசாய நிலம் உள்ளது. இங்கு, மிகவும் பழமையான மலை முனீஸ்வரன் கோவில் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன், எலுமிச்சை, குங்குமம் இதர பூஜை பொருட்களை வைத்து பூஜை செய்த மர்ம நபர்கள், கோவில் முன், பள்ளம் தோண்டிவிட்டு, பின்னர், அதை மூடாமல் விட்டு சென்றுள்ளனர். இது குறித்து, நில உரிமையாளர் பசப்பாவை அழைத்து சென்று, சூளகிரி போலீசார் நேற்று நேரில் பார்வையிட்டனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில், பழங்கால கோவில்கள், நினைவு சின்னங்கள் உள்ள பகுதிகளில், மர்ம கும்பல் புதையல் வேட்டைக்காக பள்ளம் தோண்டுவது வாடிக்கையான ஒன்றுதான். கடந்த சில ஆண்டுகளாக புதையல் வேட்டை இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் மர்ம கும்பல் புதையல் வேட்டையில் ஈடுபட துவங்கி உள்ளது,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !