அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை
திருவண்ணாமலை: உலக நன்மை வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த, 4ல், தொடங்கி, இன்று (28ம்தேதி) வரை இருந்தது. இந்த நாட்களில், இறைவனை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், தோஷ நிவர்த்திக்காக சிவன் கோவில்களில், தாரா அபிஷேகம் நடக்கும். இதன்படி, 11:30 முதல் மாலை, 6:00 மணி வரை, பன்னீர், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்றவற்றை தாரா பாத்திர நீரில் போட்டு, அவற்றை, மூலவர் லிங்கம் மீது சொட்டு சொட்டாக விழும்படி, தாரா அபிஷேகம் நடந்து வந்தது.
இந்நிலையில், இன்று அக்னி நட்சத்திரம் நிறைவுறுவதையொட்டி, நேற்று மாலை அக்னி தோஷ நிவர்த்தி, 108 கலசாபிஷேக முதல்கால பூஜை தொடங்கியது. இன்று 28ல், இரண்டாம்கால பூஜை காலை, 7:00 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்ட, 108 கலச புனித நீரை கொண்டு, அருணாசலேஸ்வரருக்கு அக்னி தோஷ நிவர்த்தி கலசாபிஷேகம் நடந்தது. ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் யாரும், பூஜையில் அனுமதிக்கப்படவில்லை. மேலும், சுவாமி ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.