ஜூன் 21ம் தேதி உலகம் அழியப் போகிறதா? மாயன் காலண்டரால் பீதி
புதுடில்லி: ஜூன் 21ம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என மாயன் காலண்டர் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறது. இந்நிலையில், 2020 ஜூன் 21ம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என மாயன் காலண்டர் கூறுகிறது. முன்னதாக 2012ல் உலகம் அழியும் என மாயன் காலண்டர் தெரிவித்திருந்தது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் கிரிகோரியன் காலண்டர் 1582 முதல் நடைமுறையில் உள்ளது. கிரிகோரியன் காலண்டர், சூரியனை சுற்ற பூமி எடுத்துக்கொள்ளும் நேரத்தை பொருத்து உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னதாக மாயன், ஜூலியன் காலண்டர்கள் அதிக பயன்பாட்டில் இருந்தது. ஜூலியன் காலண்டர் படி, கிரிகோரியன் காலண்டரில் ஆண்டுக்கு 11 நாட்கள் குறைவாக கணக்கிடப்படுகிறது. அதன்படி நாம் தற்போது வாழ்வது 2020 அல்ல; 2012. மாயன் காலண்டரில் உலகம் அழிவதாக கூறிய தேதி, தற்போதைய காலண்டர் படி, வரும் ஜூன் 21ம் தேதி வருகிறது. எனவே 2020 ஜூன் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து நாசா விஞ்ஞானி கூறுகையில், இதற்கு முன் 2003, 2012ல் உலகம் அழியப்போகிறது என கூறப்பட்டது. அது நடக்கவில்லை. தற்போது 2020ல் உலகம் அழியும் என கூறுகின்றனர். இதற்கும் ஆதாரம் இல்லை. இப்போதும் எதுவும் நடக்காது எனக் கூறினார்.