திருப்புத்துார் அம்மன் கோயில்களில் பெண்கள் தரிசனம்
திருப்புத்துார்: திருப்புத்துாரில் அம்மன் கோயில்கள் மற்றும் பெருமாள் கோவிலில் ஆடி வெள்ளி மற்றும் வரலெட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் கோயில் முன் நின்று சன்னதியை வணங்கி சென்றனர். திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியன்று வழக்கமாக வரலெட்சுமி விரதம் நடைபெறும்.
பெண்கள் விரதமிருந்து இக்கோயிலில் திருவிளக்கு பூஜை நடத்துவார்கள். கொரோனா தொற்று பரவல் தடைக்கான ஊரடங்கை அடுத்துமகாலெட்சுமி மற்றும் மூலவர் பெருமாள்,தேவியர் இருவருக்கும் அபிேஷக ஆராதனை மட்டும் நடந்தது. ஆபரணங்களுடன் அலங்காரம் நடந்தது.பூமாயி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு முதன் முறையாக மூலவர் அம்மன் மற்றும் சப்த மாதாக்கள் அனைவருக்கும் பெண் பக்தர்களால் மஞ்சள் அரைத்து சாத்தப்பட்டது. இந்த ஆண்டும் அம்மனுக்கு கோவில் ஊழியர்களால் மஞ்சள் அரைத்து சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மூலவர் அம்மன் மஞ்சள் காப்பில் வெள்ளி அங்கி அணிந்து மஞ்சள் பட்டுடுத்தி திரிசூலம், சங்கு, சக்கரத்துடன் காட்சி அளித்தார். ராஜகாளியம்மன் கோயிலிலும் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. பெண்கள் பலரும் கோபுர வாசலில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.