உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுத்தால் தான் மதிப்பு

கொடுத்தால் தான் மதிப்பு


துருக்கி மன்னர் படை வீரர்களுடன் வேட்டையாடச் சென்றார். அவர்களுடன் முல்லாவும் சென்றிருந்தார். உணவு தயாரிக்க அரண்மனை சமையல் குழுவும் சென்றது. குழுவினர் காட்டில் கூடாரம் அடித்து சமையல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது உப்பு எடுத்து வர மறந்திருப்பதை அறிந்தனர்.
தலைமை சமையல்காரர் தலை கவிழ்ந்தபடி நின்றார்.
‘‘என்ன?’’ என்று விசாரித்தார் மன்னர்.
நடுங்கியபடி உப்பு எடுத்து வர தவறி விட்டதாக தெரிவித்தார் அவர்.
கடுமையாகக் கண்டித்த மன்னர் வீரர்களில் ஒருவரை அழைத்து, ‘‘ பக்கத்து கிராமத்திற்குச் சென்று யாராவது வீட்டில் கொஞ்சம் உப்பு வாங்கி வா’’ என உத்தரவிட்டார்.
அப்போது ‘‘மன்னா... வீரனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புங்கள், குடிமக்களிடம் உப்பு இனாமாகக் கேட்க வேண்டாம்’’ என்றார் முல்லா.
‘‘மலிவான உப்பைக் கூட கொடுக்க கூட முடியாத நிலையில் தான்  துருக்கி நாட்டு மக்கள் இருக்கிறார்களா?’’ எனக் கேட்டார் மன்னர். தங்களுக்காக  ஒரு மூட்டை உப்பைக்  கூட கொடுப்பார்கள். ஆனால் இனமாக கொடுத்தால் அவர்களுக்கு உங்கள் மீது இருந்த மரியாதை போய்விடுமே’’ என விளக்கினார் முல்லா.
‘‘ஏன்?’’ என்று கேட்டார் மன்னர்.
‘‘என்ன காரணத்தால் உப்பு கேட்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது.  மலிவான பொருளான உப்பை மன்னர் கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவரது நிலை தாழ்ந்து விட்டது என்றே நினைப்பார்கள். பின்னர் எப்படி மதிப்பார்கள்? அதனால்  தேவையான உப்பின் மதிப்பை விட கூடுதல் பணத்தை கொடுத்து உப்பை வாங்கலாம்’’  என்றார் முல்லா.
அவரது விளக்கத்தைக் கேட்டு மன்னரும் பணம் கொடுத்து உப்பு வாங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !