உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கரைக்க கூட்டமாக செல்ல அனுமதி இல்லை

வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கரைக்க கூட்டமாக செல்ல அனுமதி இல்லை

உளுந்தூர்பேட்டை: வீட்டில் வைத்து விநாயகர் சிலைகளை பூஜை செய்து வழிபடும் பக்தர்கள் நீர்நிலைகளில் கரைக்க கூட்டமாக செல்ல அனுமதி இல்லை என உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் கூறுகையில:  இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 22ம் தேதி சனிக்கிழமை நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தவும், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை. இருப்பினும் மக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் வீட்டிலேயே வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடலாம் அதற்கு எந்தவித தடையும் இல்லை. விநாயகர் பூஜை முடிந்து நீர்நிலைகளில் கரைக்க எடுத்துச்செல்ல 3 க்கும் மேற்பட்டோர் அல்லது கூட்டமாக செல்ல அனுமதி கிடையாது. மேளதாளத்துடன் வண்ணப் பொடிகளைத் தூவி ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை. எனவே விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித அசம்பாவிதமும் இன்றி, அமைதியாக நடக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஓரிரு நாட்களில் நடக்க உள்ள விநாயகர் சதுர்த்தி விழா குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விழா குறித்த சில கருத்துக்கள் வழங்கப்பட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படவுள்ளது. விதிகளை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டிஎஸ்பி விஜயகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !