அரங்கநாதர் கோவிலில் கற்கள் பதிப்பு
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், 9 லட்சம் ரூபாய் செலவில், பக்தர்கள் நடை பாதை மற்றும் கோவிலில் மண் தரையாக உள்ள பகுதிகளிலும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும், விடுமுறை மற்றும் சனிக்கிழமை நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் கோவிலுக்கு வந்து செல்வர். தற்போது கொரோனா பிரச்னையால் கோவில்கள் அடைக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் பகுதிகளிலும், மண் தரையாக உள்ள பகுதிகளிலும் கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் கூறியதாவது: அரங்கநாதர் கோவிலில் வளாகம் முழுவதும் கிரானைட் கற்களால் பதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நடந்து செல்லும் பகுதிகளில் சில இடங்களிலும், கிணறு அருகேயும் மண் தரையாக உள்ளது. கோவையை சேர்ந்த பக்தர் ராமசாமி ஒன்பது லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார். இந்த நிதியிலிருந்து கோவிலில் உள்ள காலியிடங்களில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் இப்பணிகள் நடைபெறுகின்றன. ராஜகோபுரத்திற்கு போக்கஸ் மற்றும் எல்.ஈ.டி., லைட்கள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு செயல் அலுவலர் கூறினார்.