மூக்கனேரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
சேலம்: சேலம் மூக்கனேரியில், நேற்று ஏராளமானோர், வீடுகளில் பூஜை செய்த விநாயகர் சிலைகளை கரைத்தனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு காரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு, பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், அவரவர் வீடுகளில் களிமண் சிலைகளை அலங்கரித்து வைத்து, மூன்று தினங்களாக பூஜை நடத்தி வந்தனர். மூன்றாம் நாளான நேற்று, ஏராளமானோர் தங்கள் வீடுகளில் பூஜித்து வந்த களிமண் சிலைகளை கரைப்பதற்காக கன்னங்குறிச்சி மூக்கனேரிக்கு எடுத்து வந்தனர். இங்கு சிலைகளை கரைக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டம் சேர்வதை தடுக்க, பூஜை செய்யவோ, கற்பூரம் ஏற்றவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. சிலைகளை அங்கிருக்கும் பணியாளர்களிடம் ஒப்படைத்தால், அவர்களே ஏரியில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகப்பெரிய சிலைகள் எடுத்து வந்தவர்களிடம், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை போலீசார் சேகரித்தனர். இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சென்ற போதும், கூட்டம் அதிகரிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.