பூஜாரிகள் ஓய்வூதிய உயர்வு எப்போது?
சென்னை; கிராம கோவில் பூஜாரிகளின் ஓய்வூதியம், வருமான உச்சவரம்பு உயர்வுக்கான அரசாணையை வெளியிட, முதல்வர் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, தமிழக முதல்வர், அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்டோருக்கு, பூஜாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாசு அனுப்பியுள்ள மனு:ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவித்தபடி, 4,000 பூஜாரிகளுக்கு, மாதம், 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, மார்ச் மாதம் முதல், பூஜாரிகள் ஓய்வூதியம், 3,000 ரூபாயாகவும், வருமான உச்ச வரம்பு, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அரசாணையை இதுவரை வெளியிடாததால், மூத்த பூஜாரிகள் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கோவில் பணியாளர் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, அரசாணை வெளியிட்டபட்டுள்ளது. அதேபோல, எங்களுக்கான அரசாணையும் வெளியிட, முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.