பயன்பாட்டிற்கு வந்த உத்தரகோசமங்கை மங்கள தீர்த்தம்
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள மங்கள தீர்த்தம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
பழமையும், புரதான சிறப்பினையும் பெற்ற சிவாலயமாக இக்கோயில் விளங்கி வருகிறது. ராஜகோபுரத்தின் கிழக்கே பிரம்ம தீர்த்தக்குளமும், கோயில் பிரகார வலது புறத்தில் அக்னி தீர்த்தக்குளமும், மங்களநாதர் சன்னதி அருகே ஹரித்துவார் தீர்த்தமும் உள்ளது.கோயில் நந்தவனத்தில் உள்ள மங்கள விநாயகர்சன்னதிக்கு முன்புறமுள்ள மங்கள தீர்த்தம், 40 ஆண்டுகளாக பயன்பாடுஇன்றி காணப்பட்டது. தரைமட்ட தீர்த்த கிணற்றின் தண்ணீர் மாசுபட்டும், பயன்படுத்த இயலாத வகையில் இருந்தது. தற்போது புதியதாக மங்கள தீர்த்தக்கிணறு துார்வாரப்பட்டு நான்கு புறத்திலும் பாதுகாப்பு சுவர் எழுப்பப்பட்டு, பரிகார பூஜைகளுக்கு பின்னர், புனித நீராக மாறியுள்ளது. கோயில் சமஸ்தான திவான் கே.பழனிவேல் பாண்டியன் கூறியதாவது: முன்பு மங்கள தீர்த்தக்கிணற்றில் இருந்து சுவாமி, அம்பாளுக்கு புனிதநீர் எடுத்து பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் பராமரிப்பின்றி இருந்ததால், கொரோனா ஊரடங்கில் கோயில் நடை அடைக்கப்பட்ட காலத்தில் துார்வாரப்பட்டு, புனித நீர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.