சிலைகள் திருட்டு 42 ஆண்டுக்கு பின் வழக்கு பதிவு
ADDED :1892 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, பல கோடி ரூபாய் மதிப்புடைய ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது தொடர்பாக, 42 ஆண்டுகளுக்கு பின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த தீபாம்பாள்புரம் வண்மீகநாதர் கோவிலில் இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புடைய, ஐம்பொன்னால் ஆன தொன்மையான தியாகராஜர் சுவாமி சிலை, இரு அம்பாள் சிலை ஆகியவை கடந்த, 1978ம் ஆண்டு திருட்டு போயின. கோவிலின் செயல் அலுவலர் அசோக்குமார், நேற்று அளித்த புகார்படி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து, 42 ஆண்டுகளுக்கு முன் திருட்டு போன சிலைகளை கண்டுபிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.