அறநிலைய துறைக்கு புதிய கமிஷனர்
சென்னை:அறநிலையத் துறையின் புதிய கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரபாகர் பொறுப்பேற்றார்.
பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்த அறநிலையத் துறைக்கு, 201௮ டிசம்பரில், பணீந்திர ரெட்டி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலத்தில், பல கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்கப்பட்டன.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ௫,௦௦௦த்துக்கும் மேற்பட்ட கோவில்களும் கண்டறியப்பட்டன. கோவில் நகைகள், சிலைகள், ஆவணங்களை பதிவேற்றம் செய்து, இணையதளம் வாயிலாக வெளியிட நடவடிக்கை எடுத்தார்.
அறநிலையத்துறையில் இருந்த காலி பணியிடங்களை, தேர்வாணையம் வாயிலாக நிரப்பவும் முயற்சி எடுத்தார். அரசியல் குறுக்கீடுகளால், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய, நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.இந்நிலையில், பணீந்திர ரெட்டி, ஜூன், 18ல், வருவாய் துறை நிர்வாக கமிஷனராக மாற்றப்பட்டார். அதனுடன், அறநிலையத்துறை கமிஷனர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக இருந்த பிரபாகர், அறநிலையத்துறை புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, அவர் வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து, நேற்று, அறநிலையத்துறை தலைமையகத்தில், கமிஷனராக பொறுப்பேற்றார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.