ஐந்தெழுத்து மந்திரத்தின் மகத்துவம் உணர்த்தும் திருவாசகம்
திருப்பூர்: ‘நமசிவாய’ என்கிற ஐந்தெழுத்து மந்திரத்தை கொண்டு துவங்கும் ஒரே திருமுறை திருவாசகம் என, சைவ சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசினார்.
கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட்ஸ் சார்பில், திருவாசகம் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்திலுள்ள திருவருள் அரங்கில், கடந்த 20ல் துவங்கி நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த வகுப்பில், கோவையை சேர்ந்த சித்தாந்த பேராசிரியர் சிவ சண்முகம், திருவாசகம் குறித்து விளக்கம் அளிக்கிறார். நேற்றைய வகுப்பில், சிவசண்முகம் பேசியதாவது: மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய சிவபுராணமானது, சிவனது அனாதி முறைமையான பழமை. காலத்தால் அளவிட முடிகின்ற பழமை; காலத்தால் அளவிட முடியாத பழமை என இரண்டு உள்ளது.
காலம் கடந்த புராணம் என்பதாலேயே சிவபுராணம், அனாதி முறைமையான பழமை எனப்படுகிறது. பன்னிரெண்டு திருமுறைகளில் எட்டாவது திருமுறையாக அமைந்திருப்பது, திருவாசகம். ‘நமசிவாய’ என்பது சைவர்களின் தலையாய மந்திரம். எல்லா திருமுறைகளிலும், ஐந்தெழுத்து மந்திரம் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும், ‘நமசிவாய வாழ்க’ என, சிவனின் ஐந்தெழுத்து மந்திரத்தை கொண்டே துவங்கும் திருமுறை, திருவாசகம் மட்டும்தான். முதல் முதலாக அச்சிலேறிய திருமுறையும், திருவாசகம்தான். மாணிக்கவாசகரின் காலம், இன்று வரை ஆராய்ச்சிக்குரியதாகவே இருந்தாலும், இறைவனின் திருவருளால், அவரது நுால் நமக்கு கிடைத்திருக்கிறது. உருக்கங்கள் நிறைந்த திருவாசகம், நன்மை பயக்கும் ‘நம சிவாய’ மந்திரத்தை நமக்கு சொல்கிறது. ‘கோகழி ஆண்ட குறுமணி தன் தாள் வாழ்க’ என்றால், நம்மையெல்லாம் ஆட்கொள்ள, இறைவனே குருநாதராய் வந்து உபதேசம் செய்வார்; அதனால், நமது துன்பங்கள், அறியாமையெல்லாம் அகலும், எ று பொருள். அறியாமையை அகற்றுபவர் குருநாதர்; சிவபெருமானே குருநாதராக வந்து, இருள் அகற்றி, ஒளிவீசுமாறு செய்வார். இவ்வாறு, அவர் பேசினார். வாரந்தோறும் செவ்வாய் கிழமை, மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில், அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.