ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுகா, ஆதிதிருவரங்கம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா பூஜை கடந்த 26ம் தேதி, கோ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, யஜமான சங்கல்பம், புண்ணியாகவஜனம், வாஸ்துசாந்தி, பூர்ணாஹூதி, சாற்றுமுறை, அக்னி பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மகா சாந்தி, சப்த கலச ஸ்நாபனம், மகா சாந்தி திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து இன்று 28ம் தேதி காலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:00 மணி முதல் காலை 10.30 மணிக்குள், கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.