சென்னை கோவில்களில் தை கிருத்திகை விழா: காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
சென்னை: தை கிருத்திகையை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர்களில் கோவில்களில் குவிந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப, முருகனுக்கு வரும் முதல் விசேஷம் தை கிருத்திகை. வழக்கமாக செவ்வாய்கிழமைகளில் முருகன் கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்கள் அதிகம் வருவர். இந்நிலையில், நேற்று தை கிருத்திகை செவ்வாய்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அந்தவகையில், குன்றத்துார் முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில்களில், சிறுவாபுரி முருகன் கோவில், தை கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருப்போரூர் கந்தசுவாமி கோவில், ஊத்துக் கோட்டை சுருட்டப்பள்ளி சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சண்முக பெருமானுக்கு, தங்க மயில் சேவை நடந்தது. இதற்காக, 4 கி.மீ., துாரத்தில் உள்ள வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து, 1,500க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பால் காவடி, பன்னீர் காவடி, சடல் காவடி எடுத்து, பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ சண்முக பெருமானுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.