உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் தை கிருத்திகை விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோவிலில் தை கிருத்திகை விழா கோலாகலம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று தை கிருத்திகையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் மற்றும் கிருத்திகை நாட்களில் முருகன் கோவிலுக்கு அதிகளவிலான பக்தர்கள் வருவர். நேற்று தை கிருத்திகை என்பதால், அண்டை மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். இதனால், பொதுவழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


மூலவர் முருகபெருமானுக்கு பால், தயிர், பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், தங்க கவச அலங்காரத்தில் உற்சவர் முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு முருகபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை சுருட்டப்பள்ளி சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள முருக பெருமான் சன்னிதியில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும், அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலைக்கோவிலில், நேற்று சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !