உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேடி வந்த தெய்வம்

தேடி வந்த தெய்வம்

காஞ்சி மகாசுவாமிகள் எப்போது வெளியே வருவார் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.  வயதான மூதாட்டி ஒருவர் ஊன்றுகோலுடன் நின்றிருந்தார்.  90 வயதான அவர் புருவத்தின் மீது கை வைத்தபடி ‘சுவாமிகள் வருகிறாரா’  என கண்ணை இடுக்கியபடி பார்த்தார்.  
  ஆனால் சுவாமிகள் வருவதாக தெரியவில்லை. கால்கள் தள்ளாடியதால் மூதாட்டியால் நிற்க முடியவில்லை.
 ‘‘சங்கரா! நிற்க முடியாமல் தவிக்கும் எனக்கு தரிசனம் தரக் கூடாதா? உலகில் இருந்து  விரைவில் விடைபெற வேண்டியவள்  நான். அதற்குள் உன்னை ஒருமுறை தரிசிக்க விரும்புவது தவறா? கால் வலிக்கிறதே சங்கரா?’’ என வாய்விட்டு அரற்றினார்.  
வரிசையில் நின்ற பக்தர்கள், ‘இந்த பாட்டிக்காகவாவது மகாசுவாமிகள்  வர மாட்டாரா’ என பரிதாபம் கொண்டனர்.   
 அப்போது மடத்துடன் தொடர்புடைய சாஸ்திரிகள் ஒருவர் அங்கு வந்தார். மூதாட்டியைக் கண்டு இரங்கிய அவர், மகாசுவாமிகள் இருக்கும் இடம் நோக்கிச் சென்றார். அங்கு ஒருவரிடம் உரையாடியபடி இருந்த சுவாமிகள், ‘என்ன விஷயம்?’ என  கேட்டார்.
‘சுவாமி....வெளியே ஒரு பாட்டி தரிசனத்திற்காக காத்திருக்கிறார். வயது தொண்ணுாறு இருக்கும்’’  என்றார் சாஸ்திரிகள்.
சுவாமிகள் உடனே எழுந்து வெளியே வந்தார்.
‘‘சங்கரா! என்னால் நிற்க முடியலையே? சீக்கிரம் தரிசனம் கொடு. என்னைக் காக்க வைக்காதே!’ என புலம்பியபடி நின்ற மூதாட்டியின் அருகில் வந்து நின்றார்.   
பரவசப்பட்ட மூதாட்டி, ‘‘தெய்வமே! நீயே என்னை தேடி வந்துட்டியா?’’  என கைகளால் கன்னத்தில் வேகமாக இட்டுக் கொண்டாள்.
 ‘என்னைப் பார்த்தாச்சு இல்லையா? இப்போ சந்தோஷம் தானே?’
‘இந்த ஜன்மத்துக்கு போதும். சீக்கிரம் என்னை அழைச்சுக்கச் சொல்லி பகவானிடம் சொல்லு!’ என்றார். .
‘நேரம் வரப்போ தானாக பகவான் அழைச்சுப்பார். அதுவரை இடைவிடாமல் ராம நாமத்தை ஜபிக்கணும். வயசான காலத்தில இப்படி தனியா வரக் கூடாது.  துணைக்கு ஆள் அனுப்பறேன்!’’ என்றார் சுவாமிகள்.
 இளைஞர் ஒருவரைக் கூப்பிட்டு கைத்தாங்கலாக அழைத்துப் போய் வீட்டில் விட்டு வர பணித்தார். ஆனந்தக் கண்ணீர் வழிய நடந்தார் மூதாட்டி. கண்ணில் இருந்து மூதாட்டி மறையும் வரை பார்த்தார் சுவாமிகள். பக்தர்களும் கைகூப்பி மகாசுவாமிகளை வணங்கினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !