ரோட்டோரத்தில் கிடைத்த அம்மன் சிலை
பல்லடம்: பல்லடம் அருகே, ரோடு பணியின்போது கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை, வருவாய் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
பல்லடம் தாலுக்கா, பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வே.கள்ளிப்பாளையம் - எலவந்தி செல்லும் ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ரோட்டின் இருபுறமும், பொக்லைன் உதவியுடன் குழி தோண்டும் பணி நடந்து வந்தது. அதில், அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் சிவசுப்ரமணியம் உத்தரவின் பேரில், சிலை பத்திரப்படுத்தப்பட்டது. அமர்ந்த நிலையில் உள்ள அம்மன் சிலை, 4 அடி உயரத்தில், அபய முத்திரையுடன் உள்ளது. சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் கிராமத்தில் பரவியதை தொடர்ந்து, பொதுமக்கள் பலர் அம்மனை வழிபட்டு சென்றனர்.
தாசில்தார் கூறுகையில், ரோடு பணியின்போது கண்டெடுக்கப்பட்ட சிலை, தற்போது வருவாய் துறை வசம் உள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார். ரோடு பணியின்போது சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம், கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.