உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை பக்தர்கள் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கம்

திருமலை பக்தர்கள் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கம்

திருத்தணி : திருமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் வசதிக்காக, அரசு பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச், 24ம் தேதி முதல், அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் முதல், அரசு வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பஸ்கள், மாவட்டங்களுக்கு இடையே தமிழகத்திற்குள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சென்னை மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் இருந்து, திருமலைக்கு செல்லும் பக்தர்கள், பஸ் வசதி இல்லாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில், பக்தர்கள் நலன் கருதி, சென்னை கோயம்பேடு, காஞ்சிபுரம் மற்றும் திருத்தணி ஆகிய அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, அரசு பஸ்கள் தமிழக - ஆந்திர மாநில எல்லையான தடுக்குப்பேட்டை வரை இயக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து ஆந்திர மாநில அரசு பஸ்கள் நகரி, புத்துார், திருப்பதி வழியாக திருமலைக்கு இயக்கப்படுகின்றன.அதாவது, தமிழக அரசு பஸ்கள் தடுக்குப்பேட்டை சென்றவுடன், அங்கு தயாராக நின்றிருக்கும், ஆந்திர மாநில பஸ்சில், பயணியர் இறங்கி, ஏற்றப்படுகின்றனர்.இதனால், பயணியர் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திருமலைக்கு சென்று வருகின்றனர்.இது குறித்து, திருத்தணி போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம், திருத்தணி பஸ் நிலையத்தில் இருந்து, காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தமிழக - ஆந்திர மாநில எல்லைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !