திருவனந்தபுரம் புறப்பட்டது நவராத்திரி விக்ரக பவனி
நாகர்கோவில்:நவராத்திரி பூஜைக்காக கல்விக்கரசி சரஸ்வதி தேவி மற்றும் முருகன், முன்னுதித்த நங்கை விக்ரக பவனி பத்மனாபபுரத்திலிருந்து திருவனந்தபுரம் புறப்பட்டது.
திருவிதாங்கூரின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரம், பின் நிர்வாக வசதிக்காக, திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. கம்பர் வழிபட்ட சரஸ்வதி தேவி கோவில், பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ளது.இங்கு, மன்னர்கள் நவராத்திரி விழாவை பெரும் விழாவாக கொண்டாடினர். திருவனந்தபுரத்துக்கு தலைநகர் மாற்றப்பட்ட பின், ஆசாரங்கள் மாறாமல் சுவாமி விக்ரகங்கள் பவனியாக கொண்டு செல்லப்பட்டு, நவராத்திரி பூஜை நடந்தது.
நுாற்றாண்டுகளாக நடந்து வந்த பாரம்பரிய பவனி நிகழ்ச்சிக்கு, கொரோனாவை காரணம் காட்டி நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதன்படி, நேற்று காலை, 8:00 மணிக்கு, பத்மனாபபுரத்தில் இருந்து, தட்டு வாகனங்களில் சுவாமி விக்ரகங்கள் புறப்பட்டன. இன்று, களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின், நெய்யாற்றின்கரையில் தங்கி, நாளை திருவனந்தபுரம் சென்றடையும்.