மேஷம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்!
அசுவனி : ராசிநாதன் செவ்வாய் வக்ர கதியில் இருந்தாலும் உங்கள் ராசியிலேயே ஆட்சி பலம் பெறுவதாலும் உங்கள் நட்சத்திரக் காலில் சஞ்சரிப்பதாலும் மன உறுதியுடன் செயல்பட்டு வருவீர்கள். செயல்களில் வேகம் அதிகரிக்கும். செவ்வாயின் ஆட்சி பலம் அவசரத்தன்மையைக் கூட்டும். இருந்தாலும் வக்ரம் பெற்றிருப்பதால் செயல் வெற்றி தாமதமாகும். நிதானம் தேவை. பேச்சில் வெளிப்படும் கருத்துக்கள் மற்றவர் மனதை புண்படுத்தக்கூடும். வார்த்தை உபயோகிப்பதில் அதிக கவனம் கொள்ளுங்கள். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டானாலும் நவ.4 முதல் சுமூகமாகச் செல்வீர்கள். பங்காளிகளுடனான சொத்துப் பிரச்னைக நவம்பர் மாத முதல் வாரத்தில் முடிவிற்கு வரும். சொந்தவீடு வாங்கும் முயற்சியில் உள்ளவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் பாடங்கள் புரியாமல் சற்று தடுமாற்றத்திற்கு ஆளாகலாம். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. பெண்கள் நரம்பு பலவீனம் காரணமாக சிரமப்பட நேரிடும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். ஆன்மிகம் சார்ந்த செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். பணியாளர்கள் உடன்பணிபுரியும் நபர்களால் துரோகத்தைச் சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்வோர், வியாபாரிகள் கடுமையான அலைச்சலை சந்திப்பர். எதிர்பார்க்கும் வருமானம் வந்து சேர பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியம். இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கமின்றி அவதிப்படுவதால் பகலில் அவ்வப்போது துாங்கி வழிய நேரிடும். இதனால் பல வேலைகளைச் செய்து முடிக்க இயலாமல் அவதிப்படுவீர்கள். எதிலும் அவரசப்படாமல் நிதானத்தை கடைபிடித்தால் இந்த மாதத்தில் எதிர்கொள்ள இருக்கும் பிரச்னைகளை சமாளித்து வெற்றி காணலாம்.
பரணி : அக்டோபர் மாதம் 23 வரை சுகமான சூழலைக் காணும் நீங்கள் அதன் பிறகு சற்று போராட்டமான சூழலைக் காண நேரிடும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதால் மரியாதைக் குறைவான சம்பவம் நிகழலாம். வீண் விவகாரங்களால் அவதிப்படும் வாய்ப்புண்டு என்பதால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையற்ற பிரச்னைகளில் மாட்டிக் கொள்வீர்கள். அக்டோபர் இறுதி வாரத்தில் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் சுயபரிசோதனை செய்வது நல்லது. குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற கூடுதலாக செலவழிப்பீர்கள். உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். சொந்தமாக வீடு வாங்க முயற்சிப்போருக்கு எதிர்பார்க்கும் வசதிகளோடு வீடு அல்லது மனை அமைவதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் நண்பர்களின் துணையுடன் பாடங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். பிள்ளைகளின் வழியில் மனதிற்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் அரங்கேறும். கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையோடு இணைந்து சேமிப்பில் ஈடுபடுவது எதிர்காலத்திற்கு உபயோகமாக அமையும். நெருங்கிய உறவினர் ஒருவர் உதவி கேட்டு அதனை மறுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். இதனால் கருத்துவேறுபாடு உருவாகக் கூடும். தான தருமங்களில் ஈடுபாடு தோன்றும். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதில் வந்து போகும். பணியாளர்கள் அலுவலகத்தில் கலகலப்பான சூழலை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பர். சுயதொழில் செய்வோர், வியாபாரிகள் தங்கள் முகராசியின் மூலம் வாடிக்கையாளர்களை கவர்வதில் வெற்றி காண்பர். தனலாபம் சீராக வந்து கொண்டிருக்கும். கனவுத்தொல்லையால் இரவு உறக்கம் கெடலாம். மனதினை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் இந்த மாதம் மட்டுமல்ல எப்பொழுதும் வெற்றித் திருமகள் உங்களிடம் குடியிருப்பாள்.
பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலுள்ள அம்மன் கோயிலில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.