சொர்க்கம் கிடைப்பது உறுதி
ADDED :1825 days ago
மஸ்ஜிதின் நபவியில் உம்மு மிஷ்கன் என்ற பெண் துப்புரவுப் பணி செய்து வந்தாள்.
பல நாளாக அவளை காணாததால் நாயகம்,‘‘ உம்மு மிஷ்கனை காண முடியவில்லையே... ஏன்?’’ என நண்பர்களிடம் கேட்டார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
‘‘என்னிடம் தெரிவிக்கவில்லையே...’’ என கோபம் கொண்டார்.
வேலைக்காரி இறந்ததை ஏன் பெரிதுப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். அதை போக்கும் விதமாக, ‘‘அவளது மண்ணறையை காட்டுங்கள்’’ எனக் கேட்டார்.
அங்கு சென்று தொழுகை நடத்திய பின், ‘‘அந்தப் பெண் சுவர்க்கத்தில் இருப்பதை நான் கண்டேன். உன்னை இந்த அளவிற்கு உயர்த்திய செயல் எது எனக் கேட்டேன். பள்ளிவாசலில் செய்த துப்புரவு பணியே காரணம் என்றாள்’’ எனத் தெரிவித்தார். இதையறிந்த நண்பர்கள் தலைகுனிந்தனர்.
செய்யும் பணி எதுவானாலும் அக்கறை இருந்தால் சொர்க்கம் கிடைப்பது உறுதி.