திருக்காமீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
புதுச்சேரி: வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று இரவு 7.30 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம், தவில், வெண்சங்கு உள்ளிட்ட வாத்தியங்கள் ஒலிக்க, கோவில் கொடி மரத்தில், கொடியேற்றம் செய்யப்பட்டது.இரவு 9 மணிக்கு, விக்னேஷ்வரர், சோமாஸ்கந்தர், கோகிலாம்பிகை, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 27ம் தேதி பாரிவேட்டை, 31ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தேர்த் திருவிழா, வரும் 1ம் தேதி நடக்கிறது. 2ம் தேதி கோவில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம், 3ம் தேதி இரவு 7 மணிக்கு முத்துப் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.