சிந்து சமவெளி விலங்குகளின் பாறை ஓவிய தொகுப்பு கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, சிந்து சமவெளி விலங்குகளின், பாறை ஓவிய தொகுப்பு கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர், வேப்பனஹள்ளி ஒன்றியம் கொங்கனப்பள்ளி மலை பகுதியிலிருந்து, 2 கி.மீ., தொலைவிலுள்ள பாறை ஓவிய தொகுப்பை கண்டறிந்தனர்.
இது குறித்து, காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: பாறை ஓவிய தொகுப்பில் வெண்மை, காவி நிற ஓவியங்களோடு பாறை கீறல்களும் காணப்படுகின்றன. விலங்கின் மீது மனிதன் அமர்ந்துள்ளவாறும், இரு விலங்குகள் தனியாகவும், ஒரு பெண் உருவம் விலங்கின் மீது செல்வதும் இதில் உள்ளன. ஆண், பெண் உருவம் என வேறுபடுத்தி காட்டுவதால், இந்த உருவங்கள் மிக நுணுக்கமாக வரையப்பட்டதை அறியலாம். இதில், ஒற்றைக்கொம்பன் என்ற, 4,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி பகுதி அகழ்வாய்வின் போது கிடைத்த, முத்திரைகளில் காணப்படும் விலங்கு ஓவியத்தை போலவே இந்த பாறை ஓவிய தொகுப்பிலுள்ள விலங்கும் உள்ளன. அதேபோன்ற ஒற்றைக்கொம்பும், அது காளை என்பதை குறிப்பிடும் குறியீடுகளும் உள்ளன. வாலின் அருகே திமில் போன்று காணப்படுவதும், சிந்துசமவெளி விலங்கை அப்படியே ஒத்துள்ளது. இதன் மூலம், தமிழகத்துக்கும், சிந்து சமவெளிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் கருத்து, மேலும் வலுப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.