சபரிமலை பிரசாதம் பெற தபால் நிலையங்களில் முன்பதிவு
திண்டுக்கல் : சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற தபால் நிலையங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது என, கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சகாயராஜூ தெரிவித்தார்.
திருப்பதியை அடுத்து அதிக பக்தர்கள் செல்லக்கூடிய சபரிமலையில் நவம்பர் மாதத்தில் மண்டல பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 41 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனாவால் நடப்பாண்டு பக்தர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தரிசனத்திற்கு செல்லும் போது 24 மணி நேரத்திற்குள் நடத்திய கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும். மேலும் பக்தர்கள் வசதிக்காக பிரசாதங்களை தபாலில் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பாளர் தெரிவித்தது: பக்தர்களுக்கு வசதியாக திண்டுக்கல்லில் 3 தலைமை, 69 துணை உட்பட 72 தபால் நிலையங்களில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால், 3 நாட்களில் ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டிற்கே பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். அரவணை, நெய், குங்குமம், மஞ்சள், விபூதி ஆகியவை அடங்கிய பிரசாதம் கட்டணம் ரூ.450, என்றார்.