உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டை குரு பெயர்ச்சி விழா: குழந்தைகள், முதியோர்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை

திட்டை குரு பெயர்ச்சி விழா: குழந்தைகள், முதியோர்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை

தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகேயுள்ள  திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவுக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், வரும் 15-ம் தேதி நடைபெறயுள்ள குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் கூறியதாவது:

குருபெயர்ச்சி வருகின்ற 15-ம் தேதி இரவு 9.48 மணி நிகழ்கிறது. இதனால் திட்டையில்  உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு (குரு ஸ்தலம்),  குரு பெயர்ச்சி விழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவிலில் தண்ணீர் குழாய், கிருமிநாசினி தெளித்தல், பக்தர்கள் அனைவருக்கும் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்து, கை சுத்திகரிப்பான் சுத்திகரிப்பு பின்பே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.


தற்காலிக மருத்துவ முகாமில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவ பணியாளர்கள் சுகாதார அலுவலர்கள் சுழற்சிமுறையில் பணியமர்த்தப்பட வேண்டும். மேலும் மருத்துவர் குழுவினருடன் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி போன்றவை ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்தல், கோவிலின் சுற்றுப்புறங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்க ஏற்பாடு செய்தல்,குடிநீர் மருத்துவமுகாம் அவசரகால வழிகள் உள்ளிட்ட பாதைகளை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு கோவிலுக்கு வெளிப் பகுதியில், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைத்தல், பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவலர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்த அறிவுறுத்தப்பட்டு கோவில் வளாகம் மற்றும் வெளிப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்களை கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் பக்தர்கள் வந்து செல்ல தஞ்சாவூரிலிருந்து சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கோவிலுக்கு உள்ளே சென்றிட அனுமதி கிடையாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !