விஜயேந்திரர் அருளுரை பிறருக்கு உதவி செய்வோம்!
மனிதப் பண்புகளை வளர்த்துக் கொள்ளக் கூடிய, மனித நேயத்தை வளர்க்கக் கூடிய பல்வேறு பழக்க வழக்கங்களை, பண்டிகைகள் மூலமாக நாம் கற்று வருகிறோம். உன்னதமான இந்த பாரம்பரியத்தை தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர் வீடுகளிலும், திருக்கோவில்களிலும் கடைப்பிடித்து, அனுசரித்து கொண்டாடி, மகிழ்ச்சி நிலைத்து இருப்பதற்கான தொண்டாற்றி வருகின்றனர்.
பரம்பரை பரம்பரையான இந்த பழக்கத்தில், தீபாவளித் திருநாள், தன்னம்பிக்கையுடன் கொண்டாடப்படுகிறது. கடந்த ஐந்து ஆறு மாதங்களாக, நாம் பார்த்தும், கேட்டும் வரக்கூடிய உலக சூழ்நிலையில், குறிப்பாக நம் நாட்டில் நிலவி வரக்கூடிய பல்வேறு ஆபத்துகள், அச்சங்கள், பயங்கள், சங்கடங்கள் மத்தியில், மக்கள் நம்பிக்கையோடும், பரஸ்பரம் உதவி செய்து கொள்ள வேண்டும் என்கிற சகோதரத்துவ உணர்வுடனும் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
தீய சக்திகளை அடக்கி, மக்களுக்கு, நல்லோருக்கு, தீய சிந்தனை உள்ளவர்களால் ஏற்படக் கூடிய பல சங்கடங்களை, கஷ்டங்களை நீக்கி, உலகத்திலே அமைதியும், அன்பும், அறங்களும் வளர வேண்டும் என்பதற்காக, கிருஷ்ண பரமாத்மாவை வழிபடும் பண்டிகையாக, தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.உலகத்தினுடைய பொது மறையாக விளங்கும் பகவத் கீதை மூலம், மனிதர்கள், மனிதர்களாக வாழ்ந்து, இறைவனுடைய அருளைப் பெற்று, மேன்மேலும் உன்னத நிலையை அடைய, நமக்கு போதித்தவர் கிருஷ்ண பரமாத்மா.
பகவத்கீதையின் சாரத்தை, தத்துவத்தை உணர்ந்து, அனைவரும் நல்ல பண்புகளை வளர்த்து, நம் நாடு பாதுகாப்பானதாகவும், இயற்கை வளங்கள் நல்ல விதமாக பராமரிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு, நல்ல வேலை வாய்ப்புகளும், நல்ல தேர்ச்சி பெற்ற, திறமையான அறிவியல் மேம்பாடுகளும், நல்ல பண்புகளைக் கொண்ட ஆன்மிக அன்பர்களும் உருவாகி சிறப்பு பெற, கடவுள் கிருஷ்ணனை வணங்குவோம்.நோய் நொடிகளில் இருந்து விடுபட்டு, நல்ல கலாசாரம், வேலைவாய்ப்புடன் திகழ, ஈரேழு உலகுக்கும் குருவான, அறிஞரான, வீரரான, அவதார புருஷனான கிருஷ்ணனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும். கிருஷ்ணனை அழைக்க, தீபம் ஏற்றுவோம்; தீப ஒளி, உலகை பிரகாசிக்க வைக்கும்!இந்த நல்ல நாளில், லட்சுமி கடாட்சத்துடனும், கங்கா தேவியின் அருளுடனும், புனிதத் தன்மையோடு நாம் வாழ்ந்து, வளர்ந்து, நம்மால் ஆன உதவிகளைப் பிறருக்கு செய்து, இறைவனுடைய அருளை மென்மேலும் பெறுவோம்!
ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர!