திருச்செந்துார், பழநியில் சஷ்டி விழா துவங்கியது
துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதிக்கப்படவில்லை.திருச்செந்துார் முருகன் கோவிலில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.யாகசாலை மண்டபத்தில் காலை, 6:00 மணிக்கு ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை, யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. பின் ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளினார். விழா நாட்களில் அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நவ., 20ல் நடக்கும் சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதிலாக கோவில் வளாகத்தில் நடக்கிறது. சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி கோவிலில் நவ., 15 முதல், 21 வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. நேற்று மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவர், உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், துவாரபாலகர்கள், மயில், நவவீரர்களுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.
விரதம் இருக்கும் பக்தர்களும் கையில் காப்பு கட்டினர். நவ., 20ல் சூரசம்ஹாரம் நவ., 21 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதிஇல்லை மலையேறிய யானை கந்த சஷ்டி விழாவுக்காக, ஆண்டு முழுதும் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருக்கும் யானை கஸ்துாரி, கந்தசஷ்டி விழாவிற்காக மட்டுமே பழநி மலைக்கோவிலுக்கு அழைத்து செல்லப்படும். நேற்று விழா துவக்கத்தை முன்னிட்டு யானை கஸ்துாரி யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றது. விழா முடியும் வரை வெளிபிரகார மண்டபத்தில் தங்கி இருக்கும்.