திருத்தணி கோவிலில் கந்த சஷ்டி துவக்கம்
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, கந்தசஷ்டி விழா துவங்கியது. வரும், 21ம் தேதி வரை நடைபெறுகிறது.திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல், கந்த சஷ்டி விழா, ஏழு நாட்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி விழா, நேற்று காலை துவங்கியது. அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதே நேரத்தில், உற்சவர்கள் சண்முகப் பெருமான் மற்றும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இன்று, மூலவருக்கு பட்டு, நாளை, தங்ககவசம், 18ம் தேதி, திருவாபரணம், 19ம் தேதி, வெள்ளி கவசம், 20ம் தேதி, சந்தன காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
மேலும், மாலையில் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், 21ம் தேதி நண்பகலில் உற்சவர் திருக்கல்யாணமும் நடக்கிறது.ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில், கடைசி நாளில், சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால், திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் குறிப்பிடத்தக்கது.கந்தசஷ்டியின் போது ஏழு நாட்களும் வழக்கமாக, காலை, 8:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, காவடி மண்டபத்தில், உற்சவருக்கு நடைபெறும் லட்சார்ச்சனை விழா, கொரோனா தொற்றால், இந்தாண்டு லட்சார்ச்சனை விழா மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.