உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய திருவிழா: இன்று மாதா பவனி

கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய திருவிழா: இன்று மாதா பவனி

கழுகுமலை: கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (மே.26) மாதாவின் திருவுருவ பவனி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமான கழுகுமலைக்கு மலைக்குன்று மற்றும் கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் ஆகியவை உலகப்பிரசித்தி பெற்றவை. மேலும் இச்சிறப்புகளை காணவரும் சுற்றுலாவாசிகள் தவறாமல் காண விரும்பும் மற்றொரு சிறப்பம்சம் இரட்டை கோபுரங்களை கொண்டு நூற்றாண்டு பாரம்பரியமிக்க தூய லூர்தன்னை தேவாலயமாகும். இத்தேவாலயத்தின் இரட்டை கோபுரங்கள் கடந்தாண்டு டிச.25ந்தேதி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடத்தப்பட்டது. மேலும் இத்தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆலயத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு திருவிழா கடந்த 18ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்த சபைகள், இயக்கங்கள் வழியாக, பைபிளின் ஒவ்வொரு கருத்தை மையப்படுத்தி சிறப்பு திருப்பலிகளும், வழிபாடுகளும் நடந்தன. இந்நிலையில் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று லூர்து மாதாவின் திருவுருவ பவனி விழா நடக்கிறது. மேலும் நாளை (மே.27) நற்கருனைப் பவனியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் இன்று மாலையில் சிறப்பு வழிபாடுகளுடன் புதிய குருக்கள் இம்மானுவேல் ஜெகன்ராஜா, லூர்து மிக்கேல் வில்சன், வினோத் பால்ராஜ், விக்டர் ராஜ் ஆகியோரது தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடக்கிறது.

இதில் இறையாட்சி அந்நியன் கலாச்சாரமா அல்லது அயலான் கலாச்சாரமா என்ற தலைப்பில் பைபிள் மறையுரையும், திருப்பலியும் இலொயோலா இளைஞர் இயக்கம் மற்றும் வெளியூரில் வசிக்கும் கழுகுமலை இறைமக்கள் சார்பில் நடக்கிறது. இதையடுத்து நாளை மாலை ஜார்ஜ் அடிகளார் தலைமையில் லூர்து அன்னை உன் பாதம் போகும் பாதையில் என்ற தலைப்பில் பங்கு இறைமக்கள், புதுநன்மை பெறுவோர் மற்றும் பங்குப்பேரவையினர் சார்பில் ஆடம்பர திருப்பலியும், மறையுரையும், நற்கருனை பவனியும் நடக்கிறது. இதில் திருச்சி கப்புச்சின் சபை அன்பின் அமலன் அடிகளார் மற்றும் கோவில்பட்டி திருத்தொண்டர் ஜோசப் வர்கீஸ் ஆகியோர் பைபிள் குறித்து பேசுகின்றனர். ஏற்பாடுகளை தூய லூர்தன்னை தேவாலய பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளார் தலைமையில், திருத்தொண்டர் பிரான்சிஸ் சேவியர், பங்கு அருட்பணிப் பேரவை, துறவிகள், பக்த சபைகள், அன்பியங்கள் ஆகியவற்றை சேர்ந்தோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !