ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா!
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், வரலாற்று சிறப்பை பிரதிபலிக்கும், ராமலிங்க பிரதிஷ்டை விழா, நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் விழாவை முன்னிட்டு, நேற்று மாலை, 5 மணிக்கு ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் லட்சுமணருடன், தங்க கேடயத்தில், திட்டக்குடி நான்குமுனை சந்திப்பிற்கு எழுந்தருளினார். அங்குள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகில், ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ராமருக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வெள்ளி வேலால், ராவணன் தலை கொய்யப்பட்டு, ராவணனுக்கு முக்தி அளிக்கப்பட்டது. பின், ராமருக்கு பால் அபிஷேகம் செய்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. நான்கு ரத வீதியில், ராமர் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் இரண்டாம் நாளான இன்று, தனுஷ்கோடி ரோட்டிலுள்ள, கோதண்டராமர் கோவிலில், சேதுபந்தனம் மற்றும் விபீஷணர் பட்டாபிஷேக வைபவம் நடக்கிறது.