படித்தால் மட்டும் போதாது பணிவும் தேவை: சிருங்கேரி சுவாமி அருளுரை!
மதுரை: மதுரையில் விஜயயாத்திரை செய்து வரும் சிருங்கேரி பாரதீதீர்த்த சுவாமி டி.வி.எஸ்.நகர் டி.வி.எஸ். லட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அவரது அருளுரை: பணக்காரன் எவ்வளவு சம்பாதித்தாலும் பெருமை உண்டாவதில்லை. ஆனால், படித்தவன் எங்கு சென்றாலும் மரியாதை கிடைக்கும். அதனால் தான் முன்னோர்கள் கல்வியை இளம் வயதில் கட்டாயமாக்கி வைத்தனர். படித்தால் மட்டும் போதாது. கல்வி பெற்றதன் அடையாளமே பணிவுடன் நடப்பது தான். ஒரு மாணவனுக்கு வித்தையும், வினயமும் முக்கியமானது. வினயம் என்றால் "பணிவு . மாணவர்கள் பெற்றோரை மதிப்புடன் நடத்தவேண்டும். பெரியவர்களை வணங்கவேண்டும். சுமித்ரைக்கு லட்சுமணன், சத்ருக்கனன் என இருபிள்ளைகள். வித்தையும், பணிவும் எப்படி சேர்ந்து இருக்க வேண்டுமோ, அது போல இந்த இருகுழந்தைகளும் பிறந்ததாக காளிதாசர் வர்ணிக்கிறார். இன்றைய மாணவர்கள் பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் வந்ததும் சாதனை படைத்து விட்டதாக கர்வம் கொள்கிறார்கள். எவ்வளவு படித்தாலும் தலைகால் புரியாமல் ஆடக்கூடாது. கற்றுக் கொண்டது ரொம்ப கொஞ்சம், கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சாஸ்திரங்கள், ஞானநூல்கள் கடல் போல இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் வெறும் டம்ளர் அளவு தான் அறிந்து கொள்ள முடியும். படிக்கிற வயதில் வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தக் கூடாது. நேரத்தை வீணடிக்காமல் திட்டமிட்டு செயல்படவேண்டும். கல்வி பெறுவதன் மூலம் நல்ல சமுதாயம் உருவாகிறது. இவ்வாறு அவர் பேசினார். நாளை காலை 9மணிக்கு, மதுரை அம்மன் சந்நிதி தெரு சிருங்கேரி மடத்தில் மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யும் சுவாமி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். இரவு 8மணிக்கு சந்திர மவுலீஸ்வர பூஜை நடக்கிறது.