உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களுக்கு கட்டுப்பாடு: பாசி மணி மாலைகள் தேக்கம்

பக்தர்களுக்கு கட்டுப்பாடு: பாசி மணி மாலைகள் தேக்கம்

மேட்டுப்பாளையம்: சபரிமலைக்கு நாள் ஒன்றுக்கு, 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி என்ற வரையறை விதிக்கப்பட்டதால், நரிக்குறவர்கள் உற்பத்தி செய்த, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான, பாசி மணி மாலைகள் தேக்கம் அடைந்துள்ளன. மேட்டுப்பாளையம், காரமடை அருகே திம்மம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு, 285 வீடுகள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள், ஆண்டு முழுவதும் பாசி மணி மாலைகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் தொழிலில், ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மாலைகள் கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய ஐந்து மாதங்களில் மட்டுமே, அதிகளவில் விற்பனையாகும். இந்த மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும், முருகன் கோவிலுக்கும் செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து கொள்வது வழக்கம். கொரோனா பரவல் தடுக்கும் நோக்கத்துடன், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினமும், ௨,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் தலா, ௩,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, கேரள அரசு அறிவித்துள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, மாலை போடும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நரிக்குறவர்கள் உற்பத்தி செய்த, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான, பாசி மணி மாலைகளும் தேக்கமடைந்துள்ளன.எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த பாக்கியராஜ், ராஜா, மணிகண்டன், பிரியா ஆகியோர் கூறியதாவது.இப்பகுதியில் உள்ள, 10 குடும்பத்தினர், பாசிமணி மாலைகளை மொத்தமாக உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து குடும்பத்தினருக்கும், பாசிகளை கொடுத்து, மாலைகளாக உற்பத்தி செய்யும் வேலை வாய்ப்பை, வழங்கி வருகிறோம்.டில்லி, ஹரித்வார், நேபாளம் சென்று, பாசி மணிகளையும், சேலம், பெங்களூரில் இருந்து கம்பிகளையும் வாங்கி வருகிறோம். இதை மாலையாக உற்பத்தி செய்து, கடைகளுக்கு விற்பனை செய்கிறோம். கடை உரிமையாளர்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை எங்களுக்கு பணம் கொடுக்கின்றனர்.இந்த ஆண்டு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே, ஐயப்பன் கோவிலுக்கு அனுமதி என்பதால், பாசி மணி மாலைகள் கடைகளில் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன. எங்கள் வீடுகளிலும், உற்பத்தி செய்த பாசி மணி மாலைகள் விற்பனையாகாமல் உள்ளன.எனவே பாதிப்பில் இருந்து மீண்டு வர, தமிழக அரசு கடன் உதவி செய்ய வேண்டும். பஸ் ஸ்டாண்டில் பாசிமணி மாலைகள் விற்பனை செய்ய, கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !