நரசிம்ம பெருமாள் கோயிலில் ஜூன் 1ம் தேதி கும்பாபிஷேகம்
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நரசிம்மபெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் கி.பி. 9ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களான சடையவர்மன், ஸ்ரீவல்லவதேவன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், விக்கிரமபாண்டியன், குலசேகரபாண்டியன் ஆகியோர் காலத்தை சேர்ந்த அலர்மேல்மங்கா பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் வரும் ஜூன் 1ம் தேதி அதிகாலை 6 மணிக்கு நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், தமிழ்வளர்ச்சி இந்துசமய அறநிலைய அரசு செயலர் ராசாராம், கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் சந்திரகுமார், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், நெல்லை எம்.பி.ராமசுப்பு, தென்காசி எம்.பி.லிங்கம், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை நரசிம்மபெருமாள் கோயில் தர்கார் கணபதிமுருகன், நரமசிம்ம சுவாமி சைங்கரிய சபா நிறுவனர் மற்றும் செயலாளர் டாக்டர் சீனிவாசவெங்கடாசலம், தலைவர் வெங்கடாசலம், கோவை லெட்சுமணன், தூத்துக்குடி பட்சிராஜன், திருநெல்வேலி ஜெயபிரகாஷ், ராஜபாளையம் விஜயகுமார், சென்னை பொன்னுசாமி, ஜோதிடர் வெங்கடசுப்பிரமணியம், மூக்காண்டி அய்யர், கோவிந்தன், சந்தோசிங், கோயில் அர்ச்சகர்கள் ஆனந்தன், ரவி மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.