முன்பதிவில்லாமல் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டுகோள்
சபரிமலை: முன்பதிவு இல்லாமல் ஏராளமான வெளிமாநில பக்தர்கள் நிலக்கல் வரை வந்து திரும்புகின்றனர். முன்பதிவு இல்லாமல் பக்தர்கள் இந்த ஆண்டு சபரிமலை வரவேண்டாம் என்று தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி வார நாட்களில் 2000 பேரும் சனி ஞாயிறில் 3000 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான முன்பதிவு முடிந்து விட்டது. முன்பதிவு கிடைக்காத பக்தர்களும் மாலை அணிந்து விரதம் இருக்கின்றனர். இவர்கள் இருமுடியுடன் சபரிமலைக்கு வருகின்றனர். நிலக்கல்லில் தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியதாவது: இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலை வரவேண்டும். சன்னிதானத்தில் தங்கி பணிபுரிபவர்களுக்கு 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.