உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரஹணம்

நாளை இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரஹணம்

 சென்னை:இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரஹணம், நாளை நிகழ்கிறது. இந்த கிரஹணம் இரவில் துவங்குவதால், இந்தியாவில் பார்க்க முடியாது.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே, சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய கிரஹணம் ஏற்படுகிறது.இது, முழு சூரிய கிரஹணம், பகுதி சூரிய கிரஹணம், வளைய சூரிய கிரஹணம் என, வகைப்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரஹணம், நாளை நடக்கிறது. இதற்கு முந்தைய சூரிய கிரஹணம், ஜூன், 21ல் நிகழ்ந்தது.

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர், சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:நாளை நடக்கவுள்ள சூரிய கிரஹணம், இரவு, 7:04க்கு துவங்கும்; இரவு, 9:43 மணிக்கு உச்சம் பெற்று, டிச., 15 அதிகாலை, 12:23 மணிக்கு முடியும்.இரவில் நடப்பதால், முழு சூரிய கிரஹணமும் இந்தியாவில் தெரியாது. சிலி, அர்ஜென்டினாவில் அமைந்துள்ள டெமுகோ, வில்லாரிகா, சியரா கொலராடா உள்ளிட்ட சில நகரங்களில், இந்த நிகழ்வு தெரியும்.

மேலும், பசிபிக் பெருங்கடல், அன்டார்டிகா, தென் அமெரிக்காவின் தெற்கில் ஒரு பகுதியில், சூரிய கிரஹணத்தைக் காண முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த ஆண்டு ஐந்து சந்திர, சூரிய கிரஹணங்கள் நிகழ்ந்துள்ளன. அதில், ஜூன், 5 பவுர்ணமி நாளில் சந்திர கிரஹணம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஜூன், 21ல், ஆண்டு சூரிய கிரஹணம் நடந்தது.ஜூலை, 5ல், மீண்டும் சந்திர கிரஹணமும்; நவ., 30 மாலையில் சந்திர கிரஹணமும் நடந்தன. நாளை இரவு, ஆண்டின் கடைசி சூரிய கிரஹணம் நிகழ உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !